இயேசுவைக் காட்டிக்கொடுத்தல்
அப்பொழுது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியர்களிடத்திற்குப்போய்: நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க ஒத்துக்கொண்டார்கள். (மத்தேயு 26:14-15)
அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணதண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைப் பார்த்து, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசை பிரதான ஆசாரியர்களிடத்திற்கும் மூப்பர்களிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து: குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவம் செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்னுடைய பாடு என்றார்கள். அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே தூக்கி எரிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான். பிரதான ஆசாரியர்கள் அந்த வெள்ளிக்காசை எடுத்து: இது இரத்தத்தின் விலையென்பதால், காணிக்கைப்பெட்டியிலே இதைப் போடுவது நியாயமில்லையென்று சொல்லி, ஆலோசனை செய்தபின்பு, அந்நியர்களை அடக்கம் செய்வதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே வாங்கினார்கள். இதினிமித்தம் அந்த நிலம் இந்தநாள்வரை இரத்தநிலம் எனப்படுகிறது. இஸ்ரவேல் பிள்ளைகளால் மதிக்கப்பட்டவருக்குக் விலையாக முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து, கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது அப்பொழுது நிறைவேறியது. (மத்தேயு 27:3-10)
அப்பொழுது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் அவரைப் பிரதான ஆசாரியர்களுக்குக் காட்டிக்கொடுப்பதற்காக அவர்களிடம் போனான். அவர்கள் அதைக்கேட்டு, சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணம் கொடுக்கிறோம் என்று வாக்குக்கொடுத்தார்கள்; அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு ஏற்ற நேரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். (மாற்கு 14:10-11)
அப்பொழுது பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய ஸ்காரியோத்தென்னும் மறுபெயர்கொண்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான். அவன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் படைத்தலைவர்களிடத்திலும்போய், அவரைக் காட்டிக்கொடுக்கும் விதத்தைக்குறித்து அவர்களோடு ஆலோசனை செய்தான். அவர்கள் சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணங்கொடுக்க உடன்பட்டார்கள். (லூக்கா 22:3-5)
தவறான வழியின் வருமானத்தினால் அவன் ஒரு நிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறுவெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோனது. (அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:18)
சகோதரன் அடிமையாக விற்கப்பட்டான்
அந்த வியாபாரிகளான மீதியானியர் கடந்துபோகிறபோது, அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டுபோனார்கள். (ஆதியாகமம் 37:28)
குறிசொல்லுதலுக்குக் கொடுக்கப்பட்ட பணம்
அப்படியே மோவாபின் மூப்பர்களும் மீதியானின் மூப்பர்களும் குறிசொல்லுதலுக்கு உரிய கூலியைத் தங்களுடைய கையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டு, பிலேயாமிடத்தில் போய், பாலாகின் வார்த்தைகளை அவனுக்குச் சொன்னார்கள். (எண்ணாகமம் 22:7)
பிலேயாம் பாலாகின் ஊழியக்காரர்களுக்கு மறுமொழியாக: “பாலாக் எனக்குத் தன்னுடைய வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் தந்தாலும், சிறிய காரியமானாலும் பெரிய காரியமானாலும் செய்வதற்காக, என்னுடைய தேவனாகிய யெகோவாவின் கட்டளையை நான் மீறக்கூடாது. (எண்ணாகமம் 22:18)
அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: “பாலாக் எனக்குத் தன்னுடைய வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் கொடுத்தாலும், நான் என்னுடைய மனதாக நன்மையையோ தீமையையோ செய்கிறதற்குக் யெகோவாவின் கட்டளையை மீறக்கூடாது; யெகோவா சொல்வதையே சொல்வேன் என்று, நீர் என்னிடத்திற்கு அனுப்பின தூதுவர்களிடத்தில் நான் சொல்லவில்லையா? (எண்ணாகமம் 24:12-13)
யூத இனத்தை அழிக்க முயன்றதற்கு வாக்களிக்கப்பட்ட பணம்
ராஜாவிற்கு விருப்பமிருந்தால், அவர்களை அழிக்கவேண்டுமென்று எழுதி அனுப்பவேண்டியது; அப்பொழுது நான் ராஜாவின் கருவூலத்தில் கொண்டுவந்து செலுத்த பத்தாயிரம் தாலந்து வெள்ளியை எண்ணி ராஜாவின் காரியத்தில் பொறுப்பாய் உள்ளவனுடைய கையில் கொடுப்பேன் என்றான். அப்பொழுது ராஜா தன்னுடைய கையிலிருக்கிற தன்னுடைய மோதிரத்தைக் கழற்றி, அதை ஆகாகியனான அம்மெதாத்தாவின் மகனும் யூதர்களின் எதிரியுமாகிய ஆமானிடம் கொடுத்து, ஆமானை நோக்கி: அந்த வெள்ளியை நீ வைத்துக்கொள்; அந்த மக்களுக்கு உன்னுடைய விருப்பப்படி செய்யலாம் என்றான். (எஸ்தர் 3:9-11)
அப்பொழுது மொர்தெகாய் தனக்குச் சம்பவித்த எல்லாவற்றைப்பற்றியும், யூதர்களை அழிக்கும்படி ஆமான் ராஜாவின் கருவூலத்திற்கு எண்ணிக்கொடுப்பேன் என்று சொன்ன பணத்தொகையைப் பற்றியும் அவனுக்கு அறிவித்ததும் அல்லாமல், (எஸ்தர் 4:7)
சிம்சோனுக்குத் தீங்கு செய்யக் கொடுக்கப்பட்ட பணம்
அதற்குப்பின்பு அவன் சோரேக் ஆற்றங்கரையில் இருக்கிற தெலீலாள் என்னும் பெயருள்ள ஒரு பெண்ணோடு அன்பாயிருந்தான். அவளிடத்திற்கு பெலிஸ்தர்களின் அதிபதிகள் போய்: நீ அவனை வசப்படுத்தி, அவனுடைய மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்றும், நாங்கள் அவனைக் கட்டி பலவீனப்படுத்துவதற்கு எதினாலே அவனை மேற்கொள்ளலாம் என்றும் அறிந்துகொள்; அப்பொழுது நாங்கள் ஒவ்வொருவரும் 1,100 வெள்ளிக்காசு உனக்குக் கொடுப்போம் என்றார்கள். (நியாயாதிபதிகள் 16:4-5)
அவன் தன்னுடைய இருதயத்தில் உள்ளதையெல்லாம் தனக்கு வெளிப்படுத்தினதை தெலீலாள் கேட்டபோது, அவள் பெலிஸ்தர்களின் அதிபதிகளுக்கு ஆள் அனுப்பி: இந்த ஒருமுறை வாருங்கள், அவன் தன்னுடைய இருதயத்தில் உள்ளதையெல்லாம் என்னிடத்தில் வெளிப்படுத்தினான் என்று சொல்லச்சொன்னாள்; அப்பொழுது பெலிஸ்தர்களின் அதிபதிகள் வெள்ளிக்காசுகளைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு அவளிடம் வந்தார்கள். (நியாயாதிபதிகள் 16:18)
கொலைக்குக் கொடுக்கப்பட்ட பணம்
அவர்கள் பாகால் பேரீத்தின் கோவிலிலிருந்து 800 கிராம்ஸ் வெள்ளிக்காசை எடுத்து அவனுக்குக் கொடுத்தார்கள்; அவைகளால் அபிமெலேக்கு வீணரும் போக்கிரிகளுமான மனிதர்களை வேலைக்கு வைத்தான்; அவர்கள் அவனைப் பின்பற்றினார்கள். (நியாயாதிபதிகள் 9:4)