தேவனுடைய பங்கு

வேதவசனத்தின்படி, பூமிக்கும் அதன் நிறைவுக்கும் இறுதி உரிமையாளர் தேவனே. நிகழ்வுகள், தேசங்கள், தனிமனித இருதயங்கள் ஆகியவற்றின்மேல் அவர் கொண்டுள்ள கட்டுப்பாட்டில் அவருடைய இறையாண்மை வெளிப்படுகிறது.

எல்லாம் தேவனுக்குச் சொந்தம்

பூமியிலுள்ள எல்லாம் தேவனுக்குச் சொந்தம்

அவனை ஆசீர்வதித்து: “வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிராமுக்கு உண்டாவதாக. (ஆதியாகமம் 14:19)
அதற்கு ஆபிராம் சோதோமின் ராஜாவைப் பார்த்து; “ஆபிராமை செல்வந்தனாக்கினேன் என்று நீர் சொல்லாமலிருக்க நான் ஒரு நூலையாகிலும் காலணியின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் ஒன்றையாகிலும் எடுத்துக்கொள்ளமாட்டேன் என்று, (ஆதியாகமம் 14:22)
மோசே அவனை நோக்கி: “நான் பட்டணத்திலிருந்து புறப்பட்டவுடன், என்னுடைய கைகளைக் யெகோவாவுக்கு நேராக விரிப்பேன்; அப்பொழுது இடிமுழக்கங்கள் ஓய்ந்து கல்மழை நின்றுபோகும்; அதினால் பூமி யெகோவாவுடையது என்பதை நீர் அறிவீர். (யாத்திராகமம் 9:29)
இப்பொழுது நீங்கள் என்னுடைய வாக்கை உள்ளபடி கேட்டு, என்னுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், எல்லா மக்களையும்விட நீங்களே எனக்கு சிறந்த மக்களாக இருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது. (யாத்திராகமம் 19:5)
இதோ, வானங்களும் வானாதிவானங்களும், பூமியும் அதிலுள்ள யாவும், உன் தேவனாகிய யெகோவாவுடையவைகள். (உபாகமம் 10:14)
யெகோவாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகள் எல்லாம் உம்முடையவைகள்; யெகோவாவே, ராஜ்ஜியமும் உம்முடையது; தேவரீர், எல்லோருக்கும் தலைவராக உயர்ந்திருக்கிறீர். இப்படி மனப்பூர்வமாகக் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் யார்? என்னுடைய மக்கள் யார்? எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம். உமக்கு முன்பாக நாங்கள் எங்களுடைய முன்னோர்கள் எல்லோரைப்போலவும் அந்நியர்களாகவும் வழிப்போக்கர்களாகவும் இருக்கிறோம்; பூமியின்மேல் எங்கள் நாட்கள் ஒரு நிழலைப்போல இருக்கிறது; நிலைத்திருப்போம் என்னும் நம்பிக்கையில்லை. எங்களுடைய தேவனாகிய யெகோவாவே, உம்முடைய பரிசுத்த நாமத்திற்கென்று உமக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்கு, நாங்கள் சேமித்திருக்கிற இந்தப் பொருட்களெல்லாம் உமது கரத்திலிருந்து வந்தது; எல்லாம் உம்முடையது. (1 நாளாகமம் 29:11, 14-16)
தனக்குப் பதில்கொடுக்கப்படும்படி, முந்தி எனக்குக் கொடுத்தவன் யார்? வானத்தின் கீழுள்ளவைகள் எல்லாம் என்னுடையவைகள். (யோபு 41:11)
தாவீதின் பாடல். பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிமக்கள் யாவும் யெகோவாவுடையவை. (சங்கீதங்கள் 24:1)
நான் பசியாக இருந்தால் உனக்குச் சொல்லமாட்டேன்; பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே. (சங்கீதங்கள் 50:12)
தேவனே, எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்; நீரே எல்லா தேசங்களையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவர். (சங்கீதங்கள் 82:8)
வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது, பூலோகத்தையும் அதிலுள்ள எல்லோரையும் நீரே அஸ்திபாரப்படுத்தினீர். (சங்கீதங்கள் 89:11)
பூமியின் ஆழங்கள் அவருடைய கையில் இருக்கிறது; மலைகளின் உயரங்களும் அவருடையவைகள். கடல் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; காய்ந்த தரையையும் அவருடைய கரம் உருவாக்கினது. (சங்கீதங்கள் 95:4-5)
யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு திரளாக இருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாகப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருட்களினால் நிறைந்திருக்கிறது. (சங்கீதங்கள் 104:24)
பூமியும் அதில் உள்ளவைகளும் கர்த்தருடையது. (1 கொரிந்தியர் 10:26)

தேவனுடைய உரிமையை விளக்கும் உவமை

அன்றியும், பரலோகராஜ்யம் வெளிதேசத்திற்குப் பயணமாகப் போகிற ஒரு மனிதன், தன் வேலைக்காரர்களை அழைத்து, தன் சொத்துக்களை அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்ததுபோல இருக்கிறது. அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து வெள்ளிப்பணமும், ஒருவனிடத்தில் இரண்டு வெள்ளிப்பணமும், ஒருவனிடத்தில் ஒரு வெள்ளிப்பணமுமாகக் கொடுத்து, உடனே பயணப்பட்டுப்போனான். ஐந்து வெள்ளிப்பணத்தை வாங்கினவன்போய், அவைகளைக்கொண்டு வியாபாரம் செய்து, வேறு ஐந்து வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தான். அப்படியே இரண்டு வெள்ளிப்பணத்தை வாங்கினவனும், வேறு இரண்டு வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தான். ஒரு வெள்ளிப்பணத்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்துவைத்தான். அநேக நாட்களானபின்பு அந்த வேலைக்காரர்களுடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான். அப்பொழுது, ஐந்து வெள்ளிப்பணத்தை வாங்கினவன், வேறு ஐந்து வெள்ளிப்பணத்தைக் கொண்டுவந்து: ஆண்டவனே, ஐந்து வெள்ளிப்பணத்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு ஐந்து வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தேன் என்றான். அவனுடைய எஜமான் அவனைப் பார்த்து: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள வேலைக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாக இருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான். இரண்டு வெள்ளிப்பணத்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே, இரண்டு வெள்ளிப்பணத்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு இரண்டு வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தேன் என்றான். அவனுடைய எஜமான் அவனைப் பார்த்து: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள வேலைக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாக இருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான். ஒரு வெள்ளிப்பணத்தை வாங்கினவன் வந்து: ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனிதன் என்று அறிவேன். ஆகவே, நான் பயந்துபோய், உமது வெள்ளிப்பணத்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான். அவனுடைய எஜமான் மறுமொழியாக: பொல்லாதவனும் சோம்பலுமான வேலைக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும் தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே. அப்படியானால், நீ என் பணத்தை வங்கியிலே போட்டுவைத்திருக்கலாமே; அப்பொழுது, நான் வந்து என்னுடையதை வட்டியோடு வாங்கிக்கொள்ளுவேனே, என்று சொல்லி, அவனிடத்திலிருக்கிற வெள்ளிப்பணத்தை எடுத்து, பத்து வெள்ளிப்பணத்தை உடையவனுக்குக் கொடுங்கள். (மத்தேயு 25:14-28)

கர்த்தர் எல்லாவற்றையும் தாங்குகிறார்

இவர் பிதாவுடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய குணத்தின் சாயலாகவும் இருந்து, எல்லாவற்றையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராக, அவர்தாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்தார். (எபிரெயர் 1:3)
அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது. (கொலோசெயர் 1:17)

தேவனுக்குச் சொந்தமான குறிப்பிட்ட உடைமைகள்

நிலம்

“தேசம் என்னுடையதாக இருக்கிறதினால், நீங்கள் நிலங்களை நிரந்தரமாக விற்கவேண்டாம்; நீங்கள் அந்நியர்களும் என்னிடத்தில் தற்காலக்குடிகளுமாக இருக்கிறீர்கள். (லேவியராகமம் 25:23)

பொன்னும் வெள்ளியும்

நான் உனக்குக் கொடுத்த என்னுடைய பொன்னும், வெள்ளியுமான உன்னுடைய அலங்கார ஆபரணங்களை நீ எடுத்து, உனக்கு ஆண் உருவங்களை உண்டாக்கி, அவைகளுடன் வேசித்தனம்செய்து, (எசேக்கியேல் 16:17)
வெள்ளியும் பொன்னும் என்னுடையது என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். (ஆகாய் 2:8)

மிருகங்கள்

எல்லா காட்டு உயிரினங்களும், மலைகளில் ஆயிரமாயிரமாகத் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள். மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்; வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள். (சங்கீதங்கள் 50:10-11)

ஒவ்வொரு நிகழ்வையும் தேவன் கட்டுப்படுத்துகிறார்

பூமியிலுள்ள எல்லா நிகழ்வுகளையும் கர்த்தர் கட்டுப்படுத்துகிறார்

யெகோவாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகள் எல்லாம் உம்முடையவைகள்; யெகோவாவே, ராஜ்ஜியமும் உம்முடையது; தேவரீர், எல்லோருக்கும் தலைவராக உயர்ந்திருக்கிறீர். ஐசுவரியமும் புகழும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சக்தியும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும். (1 நாளாகமம் 29:11-12)
வானத்திலும் பூமியிலும், கடல்களிலும், எல்லா ஆழங்களிலும், யெகோவா தமக்கு விருப்பமானதையெல்லாம் செய்கிறார். (சங்கீதங்கள் 135:6)
சீட்டு மடியிலே போடப்படும்; காரியத்தின் முடிவோ யெகோவாவால் வரும். (நீதிமொழிகள் 16:33)
யெகோவாவாலே மனிதர்களுடைய நடைகள் வாய்க்கும்; ஆகையால் மனிதன் தன்னுடைய வழியை அறிந்துகொள்வது எப்படி? (நீதிமொழிகள் 20:24)
பின்பு தானியேல் சொன்னது: தேவனுடைய நாமத்திற்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் மகிமையுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது. அவர் காலங்களையும் நேரங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர். (தானியேல் 2:20-21)

கடினமான சூழ்நிலைகள் ஏற்படக் கர்த்தர் அனுமதிக்கிறார்

அப்பொழுது அவனுடைய எல்லாச் சகோதரரும் சகோதரிகளும், முன்பு அவனுக்கு அறிமுகமான அனைவரும் அவனிடத்தில் வந்து, அவன் வீட்டிலே அவனுடன் உணவருந்தி, யெகோவா அவன்மேல் வரச்செய்த எல்லா பாதிப்பினால் அவனுக்காக அங்கலாய்த்து, அவனுக்கு ஆறுதல் சொல்லி, அவரவர் ஒவ்வொரு தங்கக்காசையும், அவரவர் ஒவ்வொரு பொன் ஆபரணத்தையும் அவனுக்குக் கொடுத்தார்கள். (யோபு 42:11)
என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது மறைகிறகிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்; நானே யெகோவா, வேறொருவர் இல்லை. ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; யெகோவாவாகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர். (ஏசாயா 45:6-7)
ஆண்டவர் கட்டளையிடாமல் இருக்கும்போது, காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்? உன்னதமான தேவனுடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ? (புலம்பல்கள் 3:37-38)
ஊரில் எக்காளம் ஊதினால், மக்கள் கலங்காமல் இருப்பார்களோ? யெகோவாவுடைய செயல் இல்லாமல் ஊரில் தீங்கு உண்டாகுமோ? (ஆமோஸ் 3:6)

தேவபக்தியுள்ளவர்களின் வாழ்வில் ஒவ்வொரு சூழ்நிலையையும் நன்மையான நோக்கத்துக்காகக் கர்த்தர் பயன்படுத்துகிறார்

அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாக தேவனிடம் அன்பாக இருக்கிறவர்களுக்கு எல்லாம் நன்மைக்குரியவைகளாக நடக்கிறது என்று அறிந்திருக்கிறோம். (ரோமர் 8:28)

இறுதி நன்மைக்காகக் கடினமான சூழ்நிலைகளைக் கர்த்தர் அனுமதித்ததற்கு உதாரணம்

என்னை இந்த இடத்திற்கு வருவதற்காக விற்றுப்போட்டதினால், நீங்கள் வருத்தப்படவேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; உயிர்களைப் பாதுகாக்க தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார். தேசத்தில் இப்பொழுது இரண்டு வருடங்களாகப் பஞ்சம் உண்டாயிருக்கிறது; இன்னும் ஐந்து வருடங்கள் விதைப்பும் அறுப்பும் இல்லாமல் பஞ்சம் இருக்கும். பூமியிலே உங்கள் வம்சம் அழியாமலிருக்க உங்களை ஆதரிப்பதற்காகவும், பெரிய ரட்சிப்பினால் உங்களை உயிரோடு காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார். ஆதலால் நீங்கள் அல்ல, தேவனே என்னை இந்த இடத்திற்கு அனுப்பி, என்னைப் பார்வோனுக்குத் தகப்பனாகவும், அவருடைய குடும்பம் அனைத்திற்கும் கர்த்தனாகவும், முழு எகிப்துதேசத்திற்கும் அதிபதியாகவும் வைத்தார். நீங்கள் சீக்கிரமாக என் தகப்பனிடத்தில் போய்: தேவன் என்னை எகிப்துதேசம் முழுவதிற்கும் அதிபதியாக வைத்தார்; என்னிடத்தில் வாரும், தாமதிக்க வேண்டாம். (ஆதியாகமம் 45:5-9)

நிகழ்வுகளின் கட்டுப்பாடு குறித்து மாம்சத்துக்குரியவனின் கண்ணோட்டம்

நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே பார்த்தது: ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்திற்கு வீரர்களின் வீரம் போதாது; பிழைப்பிற்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது; ஐசுவரியம் அடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்கு அறிவில் தேறினவர்களின் அறிவும் போதாது; அவர்கள் எல்லோருக்கும் நேரமும் தேவச்செயலும் நேரிடவேண்டும். (பிரசங்கி 9:11)

கர்த்தர் கட்டுப்படுத்தும் குறிப்பிட்ட நிகழ்வுகளும் காரியங்களும்

கர்த்தர் மனிதருடைய இருதயங்களை நடத்துகிறார்

ராஜாவின் இருதயம் யெகோவாவின் கையில் நீரூற்றைப்போல இருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார். (நீதிமொழிகள் 21:1)

தேவபக்தியுள்ளவர்களுக்கு மற்றவர்களிடம் தயவு கிடைக்கச் செய்யக் கர்த்தரால் முடியும்

யெகோவாவோ யோசேப்போடு இருந்து, அவன்மேல் கிருபைவைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கச்செய்தார். (ஆதியாகமம் 39:21)
புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஏழுநாட்களாக சந்தோஷத்துடனே ஆசரித்தார்கள்; யெகோவா அவர்களை மகிழ்ச்சியாக்கி, அவர்களுடைய கைகளை இஸ்ரவேலின் தேவன் என்னும் தேவனுடைய ஆலயத்தின் வேலையிலே பலப்படுத்தத்தக்கதாக அசீரியருடைய ராஜாவின் இருதயத்தை அவர்களிடம் சார்ந்திருக்கப்பண்ணினார். (எஸ்றா 6:22)
தேவாலயத்தில் இருக்கிற கோட்டையின் கதவு வேலைக்கும், நகரமதிலின் வேலைக்கும், நான் தங்கப்போகிற வீட்டின் வேலைக்கும் வேண்டிய மரங்களை ராஜாவின் வனக் காவலாளனாகிய ஆசாப் எனக்குக் கொடுப்பதற்காகவும், அவனுக்கும் ஒரு கடிதம் கட்டளையிடப்படுவதாக என்றேன்; என் தேவனுடைய தயவுள்ள கரம் என்மேல் இருந்ததால், ராஜா அவைகளை எனக்குக் கட்டளையிட்டார். என் தேவனுடைய கரம் என்மேல் நன்மையாக இருப்பதையும், ராஜா என்னோடு சொன்ன வார்த்தைகளையும் அவர்களுக்கு தெரிவித்தேன்; அப்பொழுது அவர்கள்: எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி, அந்த நல்ல வேலைக்குத் தங்கள் கைகளை பலப்படுத்தினார்கள். (நெகேமியா 2:8, 18)

இஸ்ரவேலர் எகிப்தியரைக் கொள்ளையிட்டதற்கு உதாரணம்

அப்பொழுது இந்த மக்களுக்கு எகிப்தியர்களின் கண்களில் தயவு கிடைக்கச்செய்வேன்; நீங்கள் போகும்போது வெறுமையாகப் போவதில்லை. ஒவ்வொரு பெண்ணும், தன்தன் அயலகத்தாளிடத்திலும் தன்தன் வீட்டில் தங்குகிறவளிடத்திலும், வெள்ளியையும், பொன் நகைகளையும், ஆடைகளையும் கேட்டு வாங்குவாள்; அவைகளை உங்களுடைய மகன்களுக்கும் உங்களுடைய மகள்களுக்கும் அணிவித்து, எகிப்தியர்களைக் கொள்ளையிடுவீர்கள்” என்றார். (யாத்திராகமம் 3:21-22)
மோசே சொல்லியிருந்தபடி இஸ்ரவேல் மக்கள் எகிப்தியர்களிடம் வெள்ளி நகைகளையும் பொன் நகைகளையும் ஆடைகளையும் கேட்டார்கள். யெகோவா மக்களுக்கு எகிப்தியர்களின் கண்களில் தயவு கிடைக்கும்படி செய்ததால், கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தவிதமாக அவர்கள் எகிப்தியர்களைக் கொள்ளையிட்டார்கள். (யாத்திராகமம் 12:35-36)

கர்த்தர் சிலரைக் கடினப்படுத்துகிறார்

ஆகையால், பார்வோன் அவர்களைப் பின்தொடரும்படி, நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்தி, நானே யெகோவா என்பதை எகிப்தியர்கள் அறியும்படி, பார்வோனாலும் அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன்” என்றார்; அவர்கள் அப்படியே செய்தார்கள். (யாத்திராகமம் 14:4)
ஆனாலும் தன் தேசத்தைக் கடந்துபோவதற்கு, எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் நமக்கு அனுமதி கொடுக்கவில்லை; இந்நாளில் இருக்கிறதுபோல, உன் தேவனாகிய யெகோவா அவனை உன் கையில் ஒப்புக்கொடுப்பதற்காக, அவனுடைய மனதையும், இருதயத்தையும் கடினப்படுத்தியிருந்தார். (உபாகமம் 2:30)

இருதயத்தின் இச்சையைக் கர்த்தர் கட்டுப்படுத்துகிறார்

வருடத்தில் மூன்றுமுறை உங்களுடைய ஆண்மக்கள் எல்லோரும் இஸ்ரவேலின் தேவனாக இருக்கிற யெகோவாகிய ஆண்டவரின் சந்நிதியில் வரவேண்டும். நான் தேசங்களை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு, உங்களுடைய எல்லைகளை விரிவாக்குவேன்; வருடத்தில் மூன்றுமுறை உங்களுடைய தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதிக்கு முன்பாக தோன்றும்போது ஒருவரும் உங்களுடைய தேசத்தின் மீது படையெடுக்க ஆசைப்படுவதில்லை. (யாத்திராகமம் 34:23-24)

கர்த்தர் தேசங்களைக் கட்டுப்படுத்துகிறார்

மனித இனமான எல்லா மக்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே உண்டாக்கி, பூமியெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருக்கும் எல்லைகளையும் குறித்திருக்கிறார்; (அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:26)
தேவனுடைய மனிதன் ஒருவன் அவனிடத்தில் வந்து: ராஜாவே, இஸ்ரவேலின் படை உம்முடனே வரக்கூடாது; யெகோவா எப்பிராயீமின் எல்லா மகன்களாகிய இஸ்ரவேலோடும் இருக்கவில்லை. போக விரும்பினால் நீர் போகலாம், காரியத்தை நடத்தும்; போருக்குத் தைரியமாக நில்லும்; தேவன் உம்மை எதிரிக்கு முன்பாக விழச்செய்வார்; உதவி செய்யவும் விழச்செய்யவும் தேவனாலே முடியும் என்றான். அப்பொழுது அமத்சியா: அப்படியானால் நான் இஸ்ரவேலின் படைக்குக் கொடுத்த நூறு தாலந்திற்காகச் செய்யவேண்டியது என்ன என்று தேவனுடைய மனிதனைக் கேட்டான். அதற்கு தேவனுடைய மனிதன்: அதைப்பார்க்கிலும் அதிகமாகக் யெகோவா உமக்குக் கொடுக்கமுடியும் என்றான். (2 நாளாகமம் 25:7-9)
என் கோபத்தின் கோலாகிய அசீரியனுக்கு ஐயோ, அவன் கையிலிருக்கிறது என் கோபத்தின் தண்டாயுதம். அவபக்தியான மக்களுக்கு விரோதமாக நான் அவனை அனுப்பி, எனக்குக் கோபமூட்டின மக்களைக் கொள்ளையிடவும், சூறையாடவும், அதை வீதிகளின் சேற்றைப்போல் மிதித்துப்போடவும் அவனுக்குக் கட்டளைகொடுப்பேன். (ஏசாயா 10:5-6)